விளக்காய் விளங்கும் செடிகள்

வனேசராணாம் வநிதாஸகாநாம்
          தரீக்ருஹ உத்ஸங்க நிஷக்தபாஸஹ|
பவந்தி யத்ரோஷதயோ ரஜந்யாம்
          அதைலபூராஹா ஸுரத ப்ரதீபாஹா|| 10

கானம் திரியும் வேடுவர்
          காதல் மகளிர் தம்மொடு
தானும் இரவில் குகைகளாம்
          தங்கும் வீட்டில் ஒளிசெய
தானெய் கொள்ளும் விளக்குகள்
          தம்மை வேண்டார் இயல்பினில்
தூநல் ஒளிகால் செடிகளே
          சூழும் அங்கே தீபமாய்.


அருஞ்சொற்பொருள்:
தானெய்கொள்ளும் விளக்குகள் - ’தான் நெய் கொள்ளும் விளக்குகள்’ எனப் பிரிக்க, அதாவது அவ்வப்பொழுது நெய் ஊற்ற வேண்டிய விளக்குகள், இதற்கு மாறாய், நெய் இன்றி ஒளிவிடும் விளக்குகளாய் மூலிகைகள் விளக்குகின்றன.
தூநல் ஒளிகால் - தூய நல்ல ஒளியை உமிழும், காலுதல் - உமிழ்தல்.

இரவில் தம் பெண்டிரோடு குகைகளில் தங்கும் வேடுவர்களுக்கு ஒளிஉமிழும் மூலிகைகளே (ஔஷதி) இரவு விளக்குகளாய் விளங்கின. இதனால் அவர்கள் பாதுகாப்பாய் இரவைக் கழித்தனர் என்பதும் குறிப்பு.

’இரவில் ஒளிரும் மூலிகை’ கட்டுக்கதை என்று ஒதுக்க இயலாத ஒரு தகவல். காளிதாசர் இமாலயப் பகுதிகளைத் தாமே கண்டு அறிந்தவர் என்பதும் இதனால் உணரப்படும். இந்த ஒளிரும் செடிகளைப் பற்றிக் காளிதாசர் பிற இடங்களிலும் பேசுகிறார்.

‘வனே சராஹா’ - ’காட்டில் திரிபவர்’ - வேடுவர்.
‘தரீக்ருஹம்’ - ‘குகை வீடு’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக