மூழ்கும் குறை

அநந்த ரத்ன ப்ரபவஸ்ய யஸ்ய
              ஹிமம் ந ஷௌபாக்ய விலோபி ஜாதம்|
ஏகோ ஹி தோஷே குணஸந்நிபாதே
              நிமஜ்ஜதி இந்தோஹோ கிரணேஷ்விவாங்கஹ|| 3
   
எண்ணில் மணிகள் உண்டாக்கும்
             இயல்பால், அதனின் மேல்மூடும்
வெண்மைப் பனியால் அதனழகு
             வீழ்ந்த(து) என்று விளம்பாரே,
பண்பில் பெருகு குணங்களிடை
             படியா(து) ஓர்புன் குறைமறையும்
தண்ணல் ஒளியால் நிலவுமுகம்
             தரித்த களங்கம் மறைவதுபோல்!



அருஞ்சொற்பொருள்:
புன்குறை - சிறிய குறை,
தண்ணல் ஒளி - தண் + நல் + ஒளி - குளிர்ந்த நல்ல ஒளி

இமயம் ‘மணிகளை’ (’ரத்னம்’ என்பது மூலபாடம்) தருகிறது என்று கவி குறிப்பிடுவது ‘சிறந்த பொருட்களை’ என்னும் பொருளில். அந்தந்த இனத்தில் சிறந்ததை ‘ரத்னம்’ என்பது வழக்கு. பெண்களில் சிறந்த உமாதேவியையும், மணிகளில் சிறந்த வைடூரியம் முதலியவையும், மரத்தில் சிறந்த தேவதாரு முதலியனவும், மருந்தில் சிறந்த சஞ்சீவனி முதலியவையும் இன்னபிறவும் உற்பத்தியாக காரணமாய் இருப்பவன் இமவான். இது போன்ற பல சிறப்புகளால் அவனது மேல் மூடும் பனி அவனது பெருமையைக் குலைக்காது என்றார்.

நிலவின் களங்கம் அதன் குளிர்ந்த வெண்ணொளியில் மூழ்கி மறைவதைப் போல ஹிமவான் மேல் பனி மூடியுள்ளது என்ற குறை அவனது சிறப்புகளில் மூழ்கி மறைகிறது என்று உவமிக்கிறார் கவி. ‘நிமஜ்ஜதி’ - ‘மூழ்குகிறது’. இப்பாட்டில் இமயத்தின் மலைவடிவம் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக