காலையில் வந்த மாலை

யஸ்ச அப்ஸரோ விப்ரம மண்டநாநாம்
          ஸம்பாதயித்ரீம் ஷிகரௌர் விபர்தி|
வலாஹக ச்சேத விபக்த்த ராகாம்
          அகால ஸந்த்யாம் இவ தாதுமத்தாம்|| 4

தேவ மாதர் களித்தாட
          தேவை யான பொருளெல்லாம்
சால அளித்து, உச்சிகளில்
          தாழும் மேகக் கூட்டத்தில்
தூவிச் சிதறும் செங்காவித்
          தூளின் செம்மை தான்படிந்து
காலம் அல்லா காலத்தில்
          காட்டும் மாலை தாங்குவனே.


அருஞ்சொற்பொருள்:
தேவமாதர் - அப்ஸரஸ்கள்,
பொருள் - (இங்கே) அலங்காரப் பொருட்கள் - செங்காவிப் பொடி முதலியவை.

இமாலயம் அப்ஸரக் கன்னிகளுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களைத் தருகிறது, அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய செங்காவிப் பொடி அங்கே தாழும் மேகக் கூட்டத்தில் படிவதால் மேகங்கள் சிவந்து மாலை வேளை இல்லாத போழ்தும் மாலையைப் போல் தோன்றுகிறது என்று வருணிக்கிறார் கவி!

இமயம் அப்ஸரஸ்களின் அலங்காரத்திற்குத் தேவையான செங்காவிப் பொடியை அளவிற்கு அதிகமாகவே நல்குகிறது, அதனால்தானே அவர்கள் அதை அலட்சியமாய்ச் சிந்துகிறார்கள், அது மேகங்களில் படிகிறது?

அகால ஸந்த்யா’ - உரிய காலம் அல்லாத மாலை பொழுது. மாலை வேளை காதலர்க்கு உகந்தது, இமாலயத்தில் வசிக்கும் அப்ஸரஸ்களுக்குப் பிற வேளைகளும் மாலையாகத் திகழ்கிறது, அவர்கள் எப்பொழுதும் மகிழ்ந்தனர் என கொள்ளலாம். காதலர்கள் களிக்க அலங்காரப் பொருட்கள் மட்டுமன்றி உகந்த பொழுதையும் தந்து உதவுகிறது இமாலயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக