மைநாகன் பிறந்தான்

அஸூத ஸா நாகவதூ உபபோக்யம்
          மைனாகம் அம்போநிதி பத்த ஸக்யம்|
க்ருத்தேஅபி பக்‌ஷச்சிதி வ்ருத்ரஷத்ரௌ
          அவேதஞாஞம் குலிஷக்‌ஷதானாம்|| 20

நாகக் கன்னியர் நயப்பும் பெற்ற
மாகடல் நட்பதும், விருத்ரன் பகைவன்
ஏகும் சிறகுகள் எறியும் படையால்
நோகா மைந்தனாம் மைநாகன் பெற்றாள்.

மேனை கருவுற்றாள்

காலக்ரமேணாத தயோஹோ ப்ரவ்ருத்தே
          ஸ்வரூபயோக்யே ஸுரதப்ரஸங்கே|
மனோரமம் யௌவனம் உத்வஹந்த்யா
          கர்போஅபவத் ஸ்தாவரராஜபத்ன்யாஹா|| 19

அவ்விணை யர்தம் அழகியைந் திடுநல்
இல்லறம் தொடங்க மனங்கவர் இளமை
மெல்லியல் புவிதாங் கிடுவோன் மனைவி
செல்கா லவழி சேர்ந்தனள் கருதான்.

மேனையை மணந்தான்

ஸ மானஸீம் மேருஸகஹ பித்ரூணாம்
          கன்யாம் குலஸ்ய ஸ்திதயே ஸ்திதிஜ்ஞஹ|
மேனாம் முனீனாமபி மானனீயாம்
          ஆத்மானுருபாம் விதினா உபயேமே|| 18

மேருவின் தோழன் மேநூல்கள் கற்றோன்
ஏருடை பிதுரு ஏற்றமனப் பெண்ணாம்
சீருடை முனிவரும் சிறப்பிக்கும் மேனையைச்
சேர்குலம் நிலைக்கச் சேர்ந்தனன்நன் முறையில்.

மலையரசெனும் மாண்பு

யஜ்ஞாங்க யோனித்வமவேக்‌ஷ்ய யஸ்ய
          ஸாரம் தரித்ரீதரணச்ஷமம் ச|
ப்ரஜாபதிஹி கல்பிதயஜ்ஞபாகம்
          ஷைலாதிபத்யம் ஸ்வயமன்வதிஷ்தத்|| 17

உலகைத் தாங்கிட உறுவலி யும்வேள்விப்
பொருள்கள் தோற்றிடும் பொற்பதும் தான்கண்டு
மலைகட்(கு) அரசெனும் மாண்புடன் வேள்வியினில்
தருமவிர் ஏற்றலும் தந்தனன் அயன்தானாய்.

அடிவுழல் ஆதவன்

ஸப்தர்ஷி ஹஸ்தாவசித அவஷேஷாணி
          யதோ விவஸ்வான் பரிவர்தமானஹ|
பத்மானி யஸ்ய அகரஸரோருஹாணி
          ப்ரவோதயதி உர்த்பமுகைர்மயூகைஹீ|| 16

பதியேழ் முனிவர் பறித்தபின் மிஞ்சும்
சிகரச் சுனைவளர் செந்தா மரைப்போ(து)
அதனை அடிவுழல் ஆதவன் தன்மேல்
முகஞ்செல் கதிர்களால் முகிழ்ந்திடச் செய்வன்.

இமாலயத் தென்றல்

பாகீரதீ நிர்ஜர ஷீகராணாம்
          வோடா முஹுஹு கம்பித தேவதாருஹு|
யத்வாயுரன்விஷ்ட ம்ருகைஹீ கிராதைர்
          ஆஸேவ்யதே பின்னஷிகண்டிபர்ஹஹ|| 15

பாகீ ரதியின் படர்திரை ஏந்தி
ஊடித் தேவ தருக்கள் உலுக்கி
தோகை கலைத்துத் தொடுகிற காற்றை
வேடுவர் துய்ப்பர் வேட்டிய களைப்பில்.

முகில் திரை

யத்ர அம்ஷுகாக்‌ஷேப விலஜ்ஜிதானாம்
          யத்ருச்சயா கிம்புருஷாங்கனானாம்|
தரீக்ருஹ த்வாரவிலம்பி பிம்பாஹா
          திரஸ்கரிண்யோ ஜலதா பவந்தி|| 14

ஆடை அவிழ்ந்து அங்குளம் நானும்
பாடும் கின்னரப் பாவையர் தமக்கு
நாடா பொழுதில் நல்குகை வாயில்
மூடி உதவும் முகிலது திரையாய்.

சாமரம் வீசும் மான்கள்

 லாங்கூல விக்‌ஷேப விஸர்பி ஷோபைர்
          இதஸ்ததஸ் சந்த்ர மரீசி கௌரைஹீ|
யஸ்ய அர்தயுக்தம் கிரிராஜஷப்தம்
          குர்வந்தி வாலவ்யஜனைஷ் சமர்யஹ|| 13

அங்கும் இங்கும் அசைந்தாடி
          அழகைப் பரப்பும், வால்நுனியில்
சந்திரக் கதிர்கள் போல்நிறையும்
          தண்வெண் மயிர்கள் சேர்ந்திடுமச்
சுந்தரக் கவரிச் சாமரங்கள்
          சூழ்ந்து வீசும் மான்களவை,
இங்கிவன் மலைகட்(கு) ஓரரசன்
          என்னும் சொற்குப் பொருள்சேர்க்கும்.

ஒளிந்த இருள்

திவாகராத் ரக்‌ஷதி யோ குஹாஸு
          லீனம் திவாபீதம் இவ அந்தகாரம்|
க்‌ஷுத்ரே அபி நூநம் ஷரணம் ப்ரபன்னே
          மமத்வம் உச்சைஸ்ஷிரஸாம் ஸதீவ|| 12

பகலில் பகலைத் தானஞ்சிப்
          பதுங்கும் இருளைத் தன்னுடைய
குகையில் கொண்டு தான்புரப்பன்
          குணத்தில் உயர்ந்தோர்க்(கு) ஒன்றாக
தகுந்தார் தகாதார் இருவரிலும்
          தன்னைச் சேர்ந்தான் எனும்பரிவு
மிகுதல் போல அவனுள்ளும்
          மிகுதல் உறுதி மிகையன்றாம்.

குதிரை முகக் கன்னியர்

உத்வேஜயதி அபி அங்குலிபார்ஷ்ணி பாகான்
          மார்கே ஷிலீபூத ஹிமேஅபி யத்ர|
ந துர்வஹ ஷ்ரோணி பயோதர ஆர்தாஹா
          பிந்தந்தி மந்தாம் கதிம் அஷ்வமுக்யஹ|| 11

குதிகால் விரல்கள் தனைவாட்டும்
          குளிர்பனிப் பாறை நிறைவழியும்
மெதுவாய்ச் செல்லும் தம்நடையை
          விரைந்திட மாற்றார் தாங்கரிய
அதிகச் சுமையாம் தனங்களதும்
          அல்குலின் புறமும் இடர்ப்படுக்கும்
குதிரை முகத்தின் கன்னியரே
          குன்றுடை மலையின் கண்ணாங்கே.

விளக்காய் விளங்கும் செடிகள்

வனேசராணாம் வநிதாஸகாநாம்
          தரீக்ருஹ உத்ஸங்க நிஷக்தபாஸஹ|
பவந்தி யத்ரோஷதயோ ரஜந்யாம்
          அதைலபூராஹா ஸுரத ப்ரதீபாஹா|| 10

கானம் திரியும் வேடுவர்
          காதல் மகளிர் தம்மொடு
தானும் இரவில் குகைகளாம்
          தங்கும் வீட்டில் ஒளிசெய
தானெய் கொள்ளும் விளக்குகள்
          தம்மை வேண்டார் இயல்பினில்
தூநல் ஒளிகால் செடிகளே
          சூழும் அங்கே தீபமாய்.

நமைச்சலும் நறுமணமும்

கபோலகண்டூஹூ கரிபிஹி வினேதும்
          விகத்திதானாம் ஸ்ரலத்ருமாணாம்|
யத்ர ஸ்ருதக்‌ஷீரதயா ப்ரஸூதஹ
          ஸாநூநி கந்தஹ ஸுரபீ கரோதி|| 9
   
காட்டில் அலைமா மதகரி
          கன்னம் உற்றத் தினவினைப்
போக்கிக் கொள்ள உரசிட
          புடையில் தேவ தருவதன்
போர்த்து பட்டை பேர்ந்துபல்
          பொளிகள் தோன்ற அதனிடை
ஊற்றும் பாலின் நறுமணம்
          ஓங்கிச் சிகரம் கமழுமால்.

இமயமும் இசையும்

யஹ பூரயன் கீசகரந்தர பாகான்
          தரீமுகோத்தேந ஸமீரணேந|
உத்காஸ்யதாம் இச்சதி கின்னராணாம்
          தானப்ரதாயித்வம் இவோபகந்தும்|| 8

கானம் பாடும் கின்னரர்
          களித்து மேலே பாடிட
நீண்மை இருள்சேர் குகைஎனும்
          நிமிர்வாய் நிறையும் காற்றினைத்
தேனீ துளைத்த மூங்கிலில்
          தேற்றி அவர்க்குத் தெள்ளிய
தானம் என்னும் இசையொலி
          தானும் தந்து மகிழுவன்.

அங்கம் அற்றோன் துறைமடல்கள்

ந்யஸ்தாக்‌ஷரா தாதுரஸேந யத்ர
          பூர்ஜத்வ்சஹ குஞ்ஜார பிந்துஷோணாஹா|
வ்ரஜந்தி வித்யாதர ஸுந்தரீணாம்
          அநங்க லேக்க க்ரியயா உபயோகம் || 7

அங்கே தூள்சேர் நீர்கொண்டு
          அழகிய வித்யா தரமகளிர்
அங்கம் அற்றோன் துறைமடல்கள்
          ஆருயிர் துணைவர்க்(கு) எழுதுவதால்
தந்தம் சேர்மால் யானைஉடல்
          தன்னை ஓக்கும் நிலைக்கண்டு
வெந்த சாம்பல் நிறபூர்ஜ
          விருட்சப் பட்டை பயனெய்தும்.

நகத்தில் சிக்கிய முத்துக்கள்

பதம் துஷார ஸ்ருதி தௌதரக்தம்
         யஸ்மின் ந திருஷ்ட்வாபி ஹததிவிபானாம்|
விதந்தி மார்க நகரந்த்ர முக்தைஹீ
         முகதாபலைஹீ கேஸரினாம் கிராதாஹா|| 6

மால்மத யானை தனைக்கொன்று
         மறைந்த ஏற்றின் குருதிபடி
கால்சுவ டதனைக் பனிகழுவக்
         காணார் எனினும் நகமுதிர்ந்த
வாலொளி முத்தின் துணைகொண்டு
         மாவரி சென்ற வழியறியும்
வேலெறி வேடர் விளையாடி
         வேட்டை ஆடும் வெற்பதுவே.

தட்பமும் வெட்பமும்

ஆமேகலம் ஸஞ்சரதாம் கநாநாம்
          சாயாம் அதஸானுகதாம் நிஷேவ்ய|
உத்வேஜிதா வ்ருஷ்டி பிராஷ்ரயந்தே
          ஷ்ருங்காணி யஸ்ய ஆதபவந்தி ஸித்தாஹா|| 5

அவன்தன் இடையில் முகிற்கூட்டம்
          அளிக்கும் நிழலில் இளைப்பாறி
உவந்து, பின்னர் அவைதாமே
          உகுக்கும் மழையில் உடல்வாடி
உயர்ந்த சிகரங் களில்ஏறி
          ஒளிரும் வெயிலில் உளம்உவக்கும்
தவம்சால் சித்தர் பலர்கூடித்
          தங்கும் இடமாய்த் திகழுவனே.

காலையில் வந்த மாலை

யஸ்ச அப்ஸரோ விப்ரம மண்டநாநாம்
          ஸம்பாதயித்ரீம் ஷிகரௌர் விபர்தி|
வலாஹக ச்சேத விபக்த்த ராகாம்
          அகால ஸந்த்யாம் இவ தாதுமத்தாம்|| 4

தேவ மாதர் களித்தாட
          தேவை யான பொருளெல்லாம்
சால அளித்து, உச்சிகளில்
          தாழும் மேகக் கூட்டத்தில்
தூவிச் சிதறும் செங்காவித்
          தூளின் செம்மை தான்படிந்து
காலம் அல்லா காலத்தில்
          காட்டும் மாலை தாங்குவனே.

மூழ்கும் குறை

அநந்த ரத்ன ப்ரபவஸ்ய யஸ்ய
              ஹிமம் ந ஷௌபாக்ய விலோபி ஜாதம்|
ஏகோ ஹி தோஷே குணஸந்நிபாதே
              நிமஜ்ஜதி இந்தோஹோ கிரணேஷ்விவாங்கஹ|| 3
   
எண்ணில் மணிகள் உண்டாக்கும்
             இயல்பால், அதனின் மேல்மூடும்
வெண்மைப் பனியால் அதனழகு
             வீழ்ந்த(து) என்று விளம்பாரே,
பண்பில் பெருகு குணங்களிடை
             படியா(து) ஓர்புன் குறைமறையும்
தண்ணல் ஒளியால் நிலவுமுகம்
             தரித்த களங்கம் மறைவதுபோல்!

உலகப் பசுவின் கன்று

யம் ஸர்வஷைலாஹா பரிகல்ப்ய வத்ஸம்
         மேரௌ ஸ்திதே தோக்தரி தோகதக்‌ஷே|
பாஸ்வந்தி ரத்நானி மகா ஔஷதீஸ் ச
         ப்ருதூபதிஷ்டாம் துதுஹுர் தரித்ரீம்|| 2

எதனை எல்லா மலைகளும்முன்
                 ஏற்ற கன்றாய் ஏற்படுத்தி
விதந்து கறக்கும் வித்தகனாய்
                 விரிந்த மேரு தனைக்கொண்டு
மிகுஒண் மணியும் மூலிகையும்
                வேந்தன் பிருது ஆணையினால்
உகுக்கும் ஆவென தானின்ற
                 உலகின் மடியின் கறந்தனவோ.

உள்ளது இமாலயம்

அஸ்தி உத்தரஸ்யாம் திஷி தேவாத்மா
          ஹிமாலயோ நாம நகாதிராஜஹ|
பூர்வாபரௌ தோயனிதீ வகாஹ்ய
          ஸ்திதஹ ப்ருதிவ்யா இவ மாநதண்டஹ|| 1

உண்டு வடக்குத் திசைதன்னில்
            உயர்ந்த தோர்நன் மலைஅரசு
கொண்ட தெய்வத் தன்மையுடன்
           கொண்ட துநற்பேர் இமயமென
நின்று மேல்கீழ் கடல்வரையில்
           நீண்டு உலகை அளந்திடுமோர்
தண்டு என்னும் தனிப்புகழைத்
           தாங்கும் அந்தத் தாவரமே!

அமுதமும் ஆசையும் - அவையடக்கம்

மகாகவி காளிதாசருக்கு அத்துணை அறிமுகம் தேவை யிருக்காது என்று நம்புகிறேன் (தேவைபடுகின்றவர்கள் விக்கிபீடியாவை நாடலாம்).

குமாரசம்பவம் காளிதாசரின் மகாகாவியங்களுள் ஒன்று. இன்று கிடைக்கும் நூலில் 17 சருக்கங்கள் (உட்பிரிவுகள்) இருப்பினும் முதல் 8 சருக்கங்களே காளிதாசர் இயற்றியவை என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன, முதன்மையானது முதல் எட்டுச் சருக்கங்களுக்கும் பின் உள்ள ஒன்பது சருக்கங்களுக்கும் உள்ள நடை வேறுபாடு, காளிதாசரின் கவித்துவத்தை இடைச்செருகு கவியால் எட்ட இயலுமா? மேலும், மல்லிநாதர் உட்பட்ட உரையாசிரியர் பலரும் முதல் எட்டுச் சருக்கங்களுக்கே உரை வகுத்துச் சென்றுள்ளனர். இறுதியாக முதல் எட்டுச் சருக்கங்களில் உள்ள பாடுபொருளே காவியப் பெயருக்குப் பொருந்துவதாய் இருக்கிறது, என்ன அது?