சாமரம் வீசும் மான்கள்

 லாங்கூல விக்‌ஷேப விஸர்பி ஷோபைர்
          இதஸ்ததஸ் சந்த்ர மரீசி கௌரைஹீ|
யஸ்ய அர்தயுக்தம் கிரிராஜஷப்தம்
          குர்வந்தி வாலவ்யஜனைஷ் சமர்யஹ|| 13

அங்கும் இங்கும் அசைந்தாடி
          அழகைப் பரப்பும், வால்நுனியில்
சந்திரக் கதிர்கள் போல்நிறையும்
          தண்வெண் மயிர்கள் சேர்ந்திடுமச்
சுந்தரக் கவரிச் சாமரங்கள்
          சூழ்ந்து வீசும் மான்களவை,
இங்கிவன் மலைகட்(கு) ஓரரசன்
          என்னும் சொற்குப் பொருள்சேர்க்கும்.


அருஞ்சொற்பொருள்:
தண்வெண் மயிர்கள் - (சந்திரனின் கதிர்களைப் போல) குளிர்ந்தும் வெண்மையாயும் விளங்கும் மயிர்க்கொத்து,
சுந்தரம் - அழகு,
சாமரம் - விசிறி.

அரசனுக்கு உரிய சின்னங்களில் ஒன்று ‘சாமரம்’, ‘சமர்ய’ என்றால் கவரிமான், அதன் வால்மயிற்றால் செய்யப்படும் விசிறி ‘சாமரம்’ ஆகும். பிற அரசர்களுக்கு மனிதர்தான் சாமரம் வீசுவர், இமவானுக்கு அச்சாமரம் தரும் கவரிமான்களே சாமரம் வீசுகின்றன என்று தற்குறிப்பேற்றினார் கவி.

இதனால் ‘கிரிராஜன்’ (மலைகளின் அரசன்) என்ற சொல்லை அம்மான்கள் பொருள்நிறைந்ததாக்கின (மெய்யாக்கின என்றவாறு).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக