உலகப் பசுவின் கன்று

யம் ஸர்வஷைலாஹா பரிகல்ப்ய வத்ஸம்
         மேரௌ ஸ்திதே தோக்தரி தோகதக்‌ஷே|
பாஸ்வந்தி ரத்நானி மகா ஔஷதீஸ் ச
         ப்ருதூபதிஷ்டாம் துதுஹுர் தரித்ரீம்|| 2

எதனை எல்லா மலைகளும்முன்
                 ஏற்ற கன்றாய் ஏற்படுத்தி
விதந்து கறக்கும் வித்தகனாய்
                 விரிந்த மேரு தனைக்கொண்டு
மிகுஒண் மணியும் மூலிகையும்
                வேந்தன் பிருது ஆணையினால்
உகுக்கும் ஆவென தானின்ற
                 உலகின் மடியின் கறந்தனவோ.



[இங்கு ‘எதனை’ (மூலத்தில் ‘யம்’) என்று இருப்பதற்கு, முதல் பாடலில் உள்ள ‘வடக்குத் திசையில் இருக்கும் இமாலயம் என்ற பெயருடைய சிறந்த மலை’ என்ற எழுவாயைக் கூட்டிக்கொள்ள வேண்டும்! இதுபோலவே பின்வரும் பதினாறு பாக்களிலும் அமைத்துள்ளார் கவி.]

அருஞ்சொற் பொருள்:
விதந்து - சிறந்து,
மிகுஒண்மணி - மிகுந்த ஒளி பொருந்திய இரத்தினங்கள்,
உகுத்தல் - (இங்கே) கறத்தல், சுரத்தல்,
ஆ - பசு.

இதில் ஒரு தொன்மம் குறிப்பிடப்பட்டுள்ளது, அதை அறிதல் பாடலின் நயத்தை புரிந்துகொள்ள உதவும்:

பிருது என்ற மன்னனின் ஆட்சியில் பூமியில் பஞ்சம் உண்டானது. உழவர்கள் மன்னனிடம் சென்று முறையிட்டனர், ‘நாங்கள் விதைக்கும் விதைகளை நிலமே விழுங்கிவிடுகிறது, பயிர்களைத் தருவதில்லை’ என்று, இதனால் பிருது மன்னன் பூமியைத் தண்டிக்க எண்ணி தன் வில்லை எடுத்தான், உடனே பூமி ஒரு பசுவாய் வடிவுகொண்டு ஓடி ஒளிந்தது, அதை துரத்திப்பிடித்தான் பிருது,

இவ்வுலகில் தீயவர் மலிந்துவிட்டமையால் தான் விளைச்சலைத் தரவில்லை, தீயவர்களை அழித்துவிட்டு நீ என்னிடமிருந்து பொருட்களைக் கொள்க’ என்று உரைத்தது பசுவடிவில் இருந்த பூமி, அவ்வாறே செய்தான் மன்னவனும். பின்னர் தகுந்த கறப்பவனையும், கன்றையும் வைத்து வேண்டிய பொருளைப் பாலாக கறந்துகொள்க என பூமிப்பசு உரைத்து நிற்க, தானே கறப்பவனாயும், மனு என்பவனைக் கன்றாகவும் கொண்டு தானியங்களைக் கறந்து கொண்டான் பிருது.

பின்னர், அவரவர் தமக்கு வேண்டியதை இவ்வாறே கொள்ளலாம் என பிருது ஆணையிட்டான், அதன்படியே தங்கள் முறை வந்த பொழுது எல்லா மலைகளும் மேரு மலையைத் திறமைவாய்ந்த  கறப்பவனாயும், தங்கள் அரசனான ஹிமாலயத்தைக் கன்றாகவும் வைத்து சிறந்த மூலிகைகளையும், ரத்தினங்களையும் பூமியிடமிருந்து பெற்றுக்கொண்டன.

இதையே இங்கே குறிப்பிடுகிறார் கவி காளிதாசர். ஹிமாலயம் பூமித்தாய்க்குக் கன்றாய் நின்றவன் எனக்குறிப்பிடுவதன் மூலம் உலகில் அவனது சிறப்பை உரைக்கிறார் - தாய்ப்பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள அன்பைச் சொல்லியா தெரியவேண்டும்?

இப்பாடல் இமாலயத்தின் முதன்மைத்துவத்தையும் சிறப்பையும் குறிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக