ஒளிந்த இருள்

திவாகராத் ரக்‌ஷதி யோ குஹாஸு
          லீனம் திவாபீதம் இவ அந்தகாரம்|
க்‌ஷுத்ரே அபி நூநம் ஷரணம் ப்ரபன்னே
          மமத்வம் உச்சைஸ்ஷிரஸாம் ஸதீவ|| 12

பகலில் பகலைத் தானஞ்சிப்
          பதுங்கும் இருளைத் தன்னுடைய
குகையில் கொண்டு தான்புரப்பன்
          குணத்தில் உயர்ந்தோர்க்(கு) ஒன்றாக
தகுந்தார் தகாதார் இருவரிலும்
          தன்னைச் சேர்ந்தான் எனும்பரிவு
மிகுதல் போல அவனுள்ளும்
          மிகுதல் உறுதி மிகையன்றாம்.


அருஞ்சொற்பொருள்:
புரப்பன் - அடைக்கலம் தருவன்,
பரிவு - கருணை.

சான்றோர் ‘இவன் தன்னை தஞ்சம் அடைந்தவன்’ என்று உத்தமன், அல்பன் என இருவர் இடத்திலும் ஒன்று போலவே கருணை காட்டுவர், அது போல இமாலயமும் இருளின் மேல் இரக்கம் கொண்டு அதனைப் பகலவனிடமிருந்து காக்கிறான், தனது குகைக்களுக்குள் அடைக்கலம் தந்து.

இமாலயத்தின் குகைகள் பகலிலும் இருள் அடர்ந்தவை என்பதை மகாகவிக்கே உரிய நயத்துடன் உரைக்கிறார் காளிதாசர். ‘திவாபீதம்’ - ஒளியை அஞ்சிய, ’அந்தகாரம்’ - இருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக