குதிரை முகக் கன்னியர்

உத்வேஜயதி அபி அங்குலிபார்ஷ்ணி பாகான்
          மார்கே ஷிலீபூத ஹிமேஅபி யத்ர|
ந துர்வஹ ஷ்ரோணி பயோதர ஆர்தாஹா
          பிந்தந்தி மந்தாம் கதிம் அஷ்வமுக்யஹ|| 11

குதிகால் விரல்கள் தனைவாட்டும்
          குளிர்பனிப் பாறை நிறைவழியும்
மெதுவாய்ச் செல்லும் தம்நடையை
          விரைந்திட மாற்றார் தாங்கரிய
அதிகச் சுமையாம் தனங்களதும்
          அல்குலின் புறமும் இடர்ப்படுக்கும்
குதிரை முகத்தின் கன்னியரே
          குன்றுடை மலையின் கண்ணாங்கே.


அருஞ்சொற்பொருள்:
தாங்கரிய - தாங்கு+அரிய - தாங்குவதற்கு அரிதான (’துர்வஹ’),
தனங்கள் - முலைகள்,
இடர்ப்படுக்கும் - (தம் எடையால்) துன்பப்படுத்தும்,
குதிரை முகத்தின் கன்னியர் - (’அஷ்வமுக்யா’) கின்னரப் பெண்கள் - கின்னரர்களின் முகம் சற்று நீண்டு இருக்கும் ஆதலால் ‘குதிரை முகத்தினர்’ எனப்பட்டனர்.

பனி பாறையாய் உறைந்து பாதங்களை வருத்தும் பொழுதும் கின்னர மகளிரால் தங்கள் மெதுவான நடையை மாற்றிக்கொண்டு விரைவாய்ச் செல்ல இயலவில்லை, காரணம் அவர்களின் முலைகள் மற்றும் இடையின் பின்பகுதியின் எடை. கின்னரப் பெண்களின் அழகும் நளினமும் இங்கே குறிக்கப்பட்டன. இத்தகையோர் வாழும் இமாலயம் எனப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக