நகத்தில் சிக்கிய முத்துக்கள்

பதம் துஷார ஸ்ருதி தௌதரக்தம்
         யஸ்மின் ந திருஷ்ட்வாபி ஹததிவிபானாம்|
விதந்தி மார்க நகரந்த்ர முக்தைஹீ
         முகதாபலைஹீ கேஸரினாம் கிராதாஹா|| 6

மால்மத யானை தனைக்கொன்று
         மறைந்த ஏற்றின் குருதிபடி
கால்சுவ டதனைக் பனிகழுவக்
         காணார் எனினும் நகமுதிர்ந்த
வாலொளி முத்தின் துணைகொண்டு
         மாவரி சென்ற வழியறியும்
வேலெறி வேடர் விளையாடி
         வேட்டை ஆடும் வெற்பதுவே.


அருஞ்சொற்பொருள்:
மால் - பெரிய,
ஏறு - சிங்கம்,
குருதி - இரத்தம்,
வாலொளி - தூய வெண்ணிற ஒளி,
மாவரி - மா + அரி - அரிமா, சிங்கம்
வெற்பு - மலை.

யானையைக் கொன்று போட்டுச் சென்றுள்ளது ஒரு சிங்கம், அதனைத் தேடி அலைகின்றனர் வேடுவர். இரத்தம் படிந்த அதன் கால்சுவடுகள் பனியில் மறைந்துவிடுகிறது, ஆனாலும் அதன் நக இடுக்கிலிருந்து உதிர்ந்து கிடக்கும் முத்துக்களை வைத்து அது சென்ற வழியை அறிகின்றனர் வேடுவர். வேட்டையில் களிக்கின்றனர். இதுதான் இமாலயம் எனக் காட்டுகிறார் கவி!

யானையின் மத்தகத்தில் முத்து உண்டாகும், சிங்கம் அதனைக் கொன்று அதன் மத்தகத்தைத் தன் காலால் கிழிக்கையில் அதன் நக இடுக்கில் அம்முத்துக்கள் சிக்கிக் கொண்டு பிறகு அது நடக்கையில் சிந்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக