இமயமும் இசையும்

யஹ பூரயன் கீசகரந்தர பாகான்
          தரீமுகோத்தேந ஸமீரணேந|
உத்காஸ்யதாம் இச்சதி கின்னராணாம்
          தானப்ரதாயித்வம் இவோபகந்தும்|| 8

கானம் பாடும் கின்னரர்
          களித்து மேலே பாடிட
நீண்மை இருள்சேர் குகைஎனும்
          நிமிர்வாய் நிறையும் காற்றினைத்
தேனீ துளைத்த மூங்கிலில்
          தேற்றி அவர்க்குத் தெள்ளிய
தானம் என்னும் இசையொலி
          தானும் தந்து மகிழுவன்.

கின்னரர் பாட வசதியாய் ஆதார சுவரம் தருகிறான் இமவான் இன்று தற்குறிப்பேற்றுகிறார் கவி.

அருஞ்சொற்பொருள்:
நீண்மை இருள் - நீள் + மை இருள்,
தேற்றி - (இங்கே) நிரப்பி,
தெள்ளிய - தெளிவான,
தானம் - மேல் ஷட்ஜமம் (சுருதி)
இசையொலி - சுவரம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. காளிதாசரின் தற்குறிப்பேற்றம் மிக மிக வியப்பிற்குரியது. குகையிலிருந்து வெளிவரும் காற்று மூங்கிலில் நுழைகிறது, வண்டுகளால் துளைக்கப்பட்ட அம்மூங்கில் இயற்கை உருவாக்கிய ஒரு புல்லாங்குழலாய்த் திகழ்கிறது (’கீசகரந்தர பாக’), எனவே நுழைந்த காற்று இசையொலியாய் வெளிவருகிறது, இந்த இசையொலி அங்கு பாடிக் கொண்டிருக்கும் கின்னரர்க்கு ஆதார சுருதியாய் அமைகிறதாம்! (’மேலே பாடுதல்’ - உச்சஸ்தாயியில் பாடுதல்)

இதில், இமாலயம் மலை வடிவிலும், தேவ வடிவிலும் ஒருசேர குறிக்கப்படுகிறது. இமவான் மலைகளின் அரசன், எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவன், தன் அவையில் பாடும் கின்னரரோடு சேர்ந்து அவனும் பாடுகிறான், குழல் ஊதி அவர்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறான்.

இமாலயத்தில் கின்னரரின் இனிய இசை எப்பொழுதும் ஒலிக்கும் என்பதும் குறிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக