உள்ளது இமாலயம்

அஸ்தி உத்தரஸ்யாம் திஷி தேவாத்மா
          ஹிமாலயோ நாம நகாதிராஜஹ|
பூர்வாபரௌ தோயனிதீ வகாஹ்ய
          ஸ்திதஹ ப்ருதிவ்யா இவ மாநதண்டஹ|| 1

உண்டு வடக்குத் திசைதன்னில்
            உயர்ந்த தோர்நன் மலைஅரசு
கொண்ட தெய்வத் தன்மையுடன்
           கொண்ட துநற்பேர் இமயமென
நின்று மேல்கீழ் கடல்வரையில்
           நீண்டு உலகை அளந்திடுமோர்
தண்டு என்னும் தனிப்புகழைத்
           தாங்கும் அந்தத் தாவரமே!

அஸ்தி’ (உள்ளது/ உள்ளான்) என்று குமாரசம்பவ மகாகாவியத்தைத் தொடங்குகிறார் மகாகவி. மங்களச் சொல்லில் தொடங்குவது மரபு. இமாலயம் (அல்லது இமயம்) என்பது மலையையும், அம்மலைக்கு அதிபதியான தேவனையும் ஒருசேரக் குறிக்கும். இதனால் இதுவே கடவுள் வாழ்த்தாகவும் ஆகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அடுத்த பதினாறு சுலோகங்களில் (பாடல்களில்) இமவானின் சிறப்புகளை விவரிக்கிறார் கவி. காவியத் தலைவியான பார்வதியின் தந்தையானதால் இத்தகு இடத்தைப் பெறுகிறான் இமவான்.

அருஞ்சொற் பொருள்:
மேல்கீழ் கடல் - மேற்கு மற்றும் கிழக்குக் கடல்கள்,
தாவரம் - அசைவற்றது, இங்கே மலையைக் குறித்தது.

காளிதாசர் குமாரசம்பவத்தை ‘அஸ்தி’ என்ற சொல்லில் தொடங்கியதற்கு ஒரு கதை வழங்குகிறது, அது பின்வருமாறு:

முட்டாளாய் இருக்கும் காளிதாசர் விதிவசத்தால் வித்யோத்தமா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அவளது அறிவுத்திறத்திற்கு ஏற்ப தானும் அறிவு பெற வேண்டி வீட்டைவிட்டுச் சென்று, காளிதேவியின் அருளால் மாபெரும் புலமை பெற்று வீடு திரும்புகிறார். வந்தவரை நோக்கி ”அஸ்தி கஷ்சித் வாக் விஷேஷஹ?” (”உள்ளதா ஏதேனும் சொல் சிறப்பு?”) என்று கேட்டாள், அதாவது சொல்லக் கூடிய அளவு ஏதேனும் சிறப்பு பெற்றீரா என்று ஏளனமாய் கேட்டாள், கேட்டவள் வாயடைத்துப் போகும் வண்ணம் மூன்று காவியங்களை இயற்றினார் காளிதாசர், அவள் சொன்ன மூன்று சொற்களை முதலாய் வைத்து. அதன்படி, குமாரசம்பவம்அஸ்தி’ என்றும், மேகதூதம்கஷ்சித்’ என்றும், இரகுவம்சம்வாக்’ என்றும் தொடங்குகின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக