மைநாகன் பிறந்தான்

அஸூத ஸா நாகவதூ உபபோக்யம்
          மைனாகம் அம்போநிதி பத்த ஸக்யம்|
க்ருத்தேஅபி பக்‌ஷச்சிதி வ்ருத்ரஷத்ரௌ
          அவேதஞாஞம் குலிஷக்‌ஷதானாம்|| 20

நாகக் கன்னியர் நயப்பும் பெற்ற
மாகடல் நட்பதும், விருத்ரன் பகைவன்
ஏகும் சிறகுகள் எறியும் படையால்
நோகா மைந்தனாம் மைநாகன் பெற்றாள்.


அருஞ்சொற்பொருள்:
நயப்பு - விருப்பம், காதல்,
விருத்திரன் பகைவன் - விருத்திரன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன், ‘வ்ருத்ரஷத்ரு’,
எறியும் படை - (இந்திரனின்) வஜ்ராயுதம்.



(’நாகக்கன்னியர் நயப்பும், மாகடல் நட்பதும் பெற்ற’ எனக் கொண்டு கூட்டுக.)

கருவுற்ற மேனை ‘மைநாகன்’ என்ற மைந்தனைப் பெற்றாள்.

இந்த மைநாகனும் இமவானைப் போல் தேவ வடிவம், மலை வடிவம் ஆகிய இரண்டும் கொண்டவன்.

முன்னர் மலைகளுக்கு சிறகுகள் (’பக்‌ஷ’) இருந்தன, இதனால் மலைகள் ஓரிடத்தில் தங்காமல் அங்கும் இங்கும் திரிந்தன. அதனால் பிற உயிரினங்கள் துன்பம் அடைந்து இந்திரனிடம் முறையிட அவன் தன் வஜ்ராயுதத்தினால் எல்லா மலைகளின் சிறகுகளையும் வெட்டி எறிந்தான். மைநாகன் சாதுர்யமாக கடலுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு கடலுக்கடியில் ஒளிந்து கொண்டான், இதனால் இந்திரனால் அவனது சிறகுகளை மட்டும் வெட்ட இயலவில்லை. ‘அவேதஞான’ - (வஜ்ராயுதத்தினால் சிறகுகள் வெட்டப்படும்) ’நோவை அறியாதவன்’ என்று மைநாகனைக் குறிப்பிட்டார் கவி. இது அவனது மலையுருவின் சிறப்பு.

கடலுக்கடியில் இருக்கையில் அங்கு வசிக்கும் நாகக் கன்னியருடன் அவன் கூடினான், அவர்களால் விரும்பப்பட்டான். இது அவனது தேவவுருவின் சிறப்பு.

இத்தகைய மைநாகனை ஈன்றாள் மேனை.

1 கருத்து: