அமுதமும் ஆசையும் - அவையடக்கம்

மகாகவி காளிதாசருக்கு அத்துணை அறிமுகம் தேவை யிருக்காது என்று நம்புகிறேன் (தேவைபடுகின்றவர்கள் விக்கிபீடியாவை நாடலாம்).

குமாரசம்பவம் காளிதாசரின் மகாகாவியங்களுள் ஒன்று. இன்று கிடைக்கும் நூலில் 17 சருக்கங்கள் (உட்பிரிவுகள்) இருப்பினும் முதல் 8 சருக்கங்களே காளிதாசர் இயற்றியவை என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன, முதன்மையானது முதல் எட்டுச் சருக்கங்களுக்கும் பின் உள்ள ஒன்பது சருக்கங்களுக்கும் உள்ள நடை வேறுபாடு, காளிதாசரின் கவித்துவத்தை இடைச்செருகு கவியால் எட்ட இயலுமா? மேலும், மல்லிநாதர் உட்பட்ட உரையாசிரியர் பலரும் முதல் எட்டுச் சருக்கங்களுக்கே உரை வகுத்துச் சென்றுள்ளனர். இறுதியாக முதல் எட்டுச் சருக்கங்களில் உள்ள பாடுபொருளே காவியப் பெயருக்குப் பொருந்துவதாய் இருக்கிறது, என்ன அது?


’குமாரசம்பவம்’ என்பது ‘குமாரனின் பிறப்பு’ என்று பொருள்படும். அதாவது போர்க்கடவுளான சுப்பிரமணியனின் பிறப்பு. தாரகாசுரன் என்ற அசுரனை அடக்க குமாரனின் பிறப்பு தேவை. குமாரன் பிறக்க வேண்டியதோ சிவ-பார்வதி தம்பதியருக்கு, அவர்களின் திருமணத்தைப் பாடுவதுதான் இக்காவியம்.

இமாலயத்தின் சிறப்புகளை வருணிப்பதில் தொடங்குகிறது முதல் சருக்கம், ஏழாம் சருக்கத்தில் சிவ-பார்வதி திருமணம் நடந்தேறி, எட்டாம் சருக்கம் அவர்களது இல்லற வாழ்வை சொல்வதோடு நிறைவடைகிறது. சிவ-பார்வதியின் இல்லறமே ‘குமாரசம்பவ’த்திற்குக் காரணம், எனவே அத்தோடு முடித்துக் கொண்டார் கவி. (பிற்சேர்கையாகக் கருதப்படும் 9-17 வரையிலான சருக்கங்களில் குமாரனின் பிறப்பும், தேவ படையோடு சென்று அவன் தாராகாசுரனை வதை செய்வதும் சொல்லப்படுகிறது, இது ‘குமாரசம்பவம்’ என்ற தலைப்பை மீறியது!)

இக்காவியத்தைப் படித்து இதனால் கவரப்பட்டு, இதைத் தமிழில் பெயர்க்க வேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்டு நான் இம்முயற்சியில் இறங்கி உள்ளேன். முழு மொழிபெயர்ப்பையும் முடித்து வைத்துக்கொண்டு, பிறகு வெளியிடுவதைவிட, மொழிபெயர்ப்பைச் செய்யச் செய்ய மக்களோடு பகிர்ந்து கொண்டு, அவர்களது விமர்சனங்களையும் கேட்டு, அதை உட்கொண்டு, இன்னும் சிறப்பாய்ச் செய்யலாமே என்றுதான் இப்பதிவைத் தொடங்கியுள்ளேன். மேலும், இவ்வாறு அறிவித்தல் இதைப் பாதியில் கைவிட விடாமல் எனக்கு ஒரு உந்துதலாய் இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும், ஆதரவையும் தவறாமல், தயங்காமல் வழங்குங்கள்...

அவையடக்கம்
[அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

பரந்த நன்பாற் கடலெனப் பாரோர் புகழ்மா கவியவன் 
சுரந்த அமுதக் குடமெனச் சூரன் கடிந்தோன் சம்பவம் 
இருந்த வடநல் மொழியினின்(று) இனிக்கும் தமிழில் பெயர்த்திடல் 
செருக்கி னாலன்(று) என்சிறு சிந்தை கொண்ட சினேகமே!

[பாடல்களை எளிமையாகவே இயற்ற முயல்கிறேன், எனவே பொழிப்புரைகள் தரப்போவதில்லை!]

மாகவி - காளிதாசர்;
சூரன் கடிந்தோன் சம்பவம் - குமாரசம்பவம் ;
வடநல்மொழி - சமஸ்கிருதம்.

காளிதாசருக்குப் பாற்கடலும், குமாரசம்பவக் காவியத்திற்கு அமுதக் குடமும் உவமைகள்.

என்னை இக்காரியத்தில் உந்துவது விருப்பமே அன்றி செருக்கு இல்லை என்றவாறு. ‘இனிக்கும் தமிழ்’ என்றதனால் என் கவித்திறம் இன்றியும் இம்மொழிபெயர்ப்பு படிப்போருக்குச் சுவைபடும் எனப்பட்டது. தொடக்கமும் முடிவும் மிகச்சிறப்பானவை யாதலால் இடைநிற்கும் என் குறைகளை ஒரு பொருட்டாகக் கொள்ளார் சான்றோர் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக