தட்பமும் வெட்பமும்

ஆமேகலம் ஸஞ்சரதாம் கநாநாம்
          சாயாம் அதஸானுகதாம் நிஷேவ்ய|
உத்வேஜிதா வ்ருஷ்டி பிராஷ்ரயந்தே
          ஷ்ருங்காணி யஸ்ய ஆதபவந்தி ஸித்தாஹா|| 5

அவன்தன் இடையில் முகிற்கூட்டம்
          அளிக்கும் நிழலில் இளைப்பாறி
உவந்து, பின்னர் அவைதாமே
          உகுக்கும் மழையில் உடல்வாடி
உயர்ந்த சிகரங் களில்ஏறி
          ஒளிரும் வெயிலில் உளம்உவக்கும்
தவம்சால் சித்தர் பலர்கூடித்
          தங்கும் இடமாய்த் திகழுவனே.


அருஞ்சொற்பொருள்:
முகிற்கூட்டம் - மேகக்கூட்டம்
உளம் - உள்ளம் (விகாரப்பட்டு நின்றது),
சித்தர் - ஒரு தேவ சாதியினர்.

இமாலயத்தில் இருக்கும் சித்தர்கள் குளிர்ச்சி மற்றும் வெய்யில் ஆகியவற்றை விரும்பியவண்ணம் அடைந்து மகிழ்ந்தனர் என்பது கருத்து. இமாலயம் பருவங்களைக் கூட விருப்பப்படி வழங்கவல்லது என்று நயப்பு தோன்ற உரைக்கிறார் கவி!

இமாலயத்தின் நடுப்பகுதி (இடை) அளவிலேயே மேகக் கூட்டம் சஞ்சரிக்கின்றது என்ற குறிப்பால் அதன் உயரத்தை உணர்த்துகிறார் காளிதாசர். ’மேகலம்’ - இடை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக